ஆருத்ரா தரிசனம் திருநாளின் களி பிரசாதம் ஏன்?

ஆன்மிக தகவல்கள்

Why is Arutra Darshan Thirunal’s play offering?

19.12.2021
தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு பவுர்ணமியுடன் இணைந்து வரும் நட்சத்திர நாள் சிறப்பானதாகும். அந்த வகையில் மார்கழி மாத்தில் வரும் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
இந்த திருவிழா ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அக்கோவிலில் இருக்கும் நடராஜனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து “திருவாதிரை” என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

பாற்கடலில் பள்ளிகொண்ட மகாவிஷ்ணு தன்னையும் அறியாமல் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இதைக் கண்ட ஆதிசேஷன் தங்களது ஆனந்தத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்க, பெருமாளோ, ஆடல்அரசனான சிவபெருமான் திருவாதிரை நாளன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.

மகாவிஷ்ணுவே மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கும் ஆசை ஏற்பட்டது. தன்னுடைய ஆவலை பெருமாளிடம் சொல்ல, அவரோ சிவபெருமானின் நடனத்தைக் காண ஆதிசேஷனை அனுப்பி வைத்தார்.

இதற்காக ஆதிசேஷன், பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். அந்த பதஞ்சலியின் உருவம் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் இருந்தது. அவர் பூலோகத்தில் கடும் தவம் இருந்தார்.
பதஞ்சலி முனிவரின் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவர் முன்பு காட்சி அளித்தார். அவரை வணங்கினார் பதஞ்சலி முனிவர். அவரிடம் சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவரோ தங்களின் திருநடனத்தை காணவேண்டும் என்றார்.
உன்னைப்போல் வியாக்ரபாதரும் என் நடனத்தைக் காண தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லை வாருங்கள். அங்கு எனது நடனத்தை காணலாம்.

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம்தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். இத்தலத்தில் சிவபெருமான் ஆகாயமாக அருள்கிறார். அங்கு சிவபெருமான் நடனம் ஆடினார். அந்த நாள்தான திருவாதிரை நாள்.
இதனால் இந்த நாளில் சிவன் கோவிலில் நடராஜனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

களி பிரசாதம்

இந்த திருவாதிரை நாளில் களி பிரசாதம்தான் பிரதானம். அதனால் தான் “திருவாதிரை அன்று ஒருவாய்க்களி” பழமொழி வந்தது. இதற்கு சிவனடியாரான சேந்தானார் வரலாறுதான் காரணம். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சேந்தனார் ஒரு விறகுவெட்டி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டு பிறது தான் உண்ணுவது சேந்தானாரின் அன்றாட கடமையாக இருந்தது. அவருக்கு அருள சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.

அன்றைய தினம் மழைபெய்தது. அதனால் விறகு விற்கமுடியவில்லை. இதனால், அன்று சமையல் சமைக்க முடியவில்லை.

மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்தவரின் வீட்டில் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார்.

சேந்தனாரிடம் உண்ண ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார். அவரோ அகமகிழ்ந்து களியை அவருக்கு அன்போடு அளித்தார். அதை அன்போடு மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் “சிவபெருமான்”. எஞ்சியிருந்த களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா? என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் “சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்”. அன்று இரவில் சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தான் சேந்தனார் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார்.
மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள்.

உடனே, அரசருக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அரசன் நேற்றிரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தான்

அப்போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள். சேந்தனாரும் அந்த தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தார்.

அரசர் மற்றும் அனைவரும் சிவபெருமானைத் தேரில் அமர்த்தி, தேர்வடம் பிடித்தார்கள். தேர் நகரவே இல்லை. மழைக்காரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமலும் இருந்தது. மன்னன், மக்கள் அனைவரும் மனம் வருந்தினார்கள்.

அப்போது ஓர் அசரீரி கேட்டது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று அசரீரி கேட்டது. சேந்தனாரோ ஒன்றுமே அறிந்திடாத யான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன்? என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ யாம் உனக்கு அருள்புரிவோம்! என்று அருள் புரிந்தார்.

அப்போது சேந்தனார் “மன்னுகதில்லை” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது.

அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்” என்று தயங்கிக் கூற, அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் என்றார்.
அதைக்கேட்ட சேந்தனார் எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை நினைத்து பரவசமடைந்தார்.

இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது.