வாஸ்து பற்றிய புராண வரலாறு; பூஜை செய்வது எப்படி?

இன்றைய & நாளைய சிறப்புகள்

Mythological history of Vastu; How to do pooja?

அந்தகாசுரன் என்ற அசுரன் கொடுமைகள் பல செய்தான். இதனால் அவனை சிவபெருமான் அழிக்க முற்பட்டார். அவனுடன் போர் புரிந்து சிவபெருமான் வெற்றி அடைந்தார்.
போரின்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால், அந்த பூதம் சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது.
தவத்தை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார். அதற்கு அந்த பூதம் “இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும்” என்றும் அழிக்கும் சக்தியும் தனக்கு வேண்டும் என்றும் கேட்டு பெற்றது.
சிவபெருமான் யாருக்கும் எந்த வரத்தையும் கொடுத்துவிடுவார். அப்படி அந்த பூதத்திற்கு வரம் அளித்தால் பெரிய விபரீதம் ஏற்படும் என்று பிரம்மாவும் தேவர்களும் கருதினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் அழுத்தினர்.
அந்த பூதம் எனக்கு பசிக்கிறது பசிக்கிறது என்று கத்தியது. அப்போது பிரம்மா, “பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக்கொள்” என்றனர்.

பிரம்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர்.

பிரம்மனும், தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி அழுத்திக்கொண்டதால், வாஸ்து பகவான் அப்படியே உறங்கத் தொடங்கினார். அப்போது யார், யார் எந்தெந்தப் பகுதியைப் பிடித்து அழுத்திக்கொண்டார்களோ, அவரவர் அந்தந்தப் பகுதிகளுக்கு அதிபதியானார்கள். எட்டுத் திசையில் இருந்த தேவர்கள் அஷ்ட திக்கின் அதிபர்கள் ஆனார்கள். பின்னால் இருந்த 45 தேவர்கள் பல்வேறு கட்டங்களுக்கு அதிபதினார்கள்.
பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாட்கள்தான் கண் விழிப்பார். அந்த நாட்களிலும் ஒன்றரை மணி நேரம்தான் விழித்திருப்பார். பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.
அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும். மற்ற நேரத்தில் பூஜை செய்யக்கூடாது.

பூமி பூஜை

மனையின் வடகிழக்கு மூலையில்தான் பூமி பூஜை செய்ய வேண்டும். வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்றடி பள்ளம் தோண்டி, அங்கிருக்கும் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மண் கொண்டுவந்து நிரப்ப வேண்டும். பிறகு, அதில் ஓர் அடி ஆழமுள்ள குழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆறு, கடல், ஓடை, ஏரி ஆகியவற்றிலிருந்து நீர் கொண்டுவந்து அதில் பால் சேர்த்து குடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்தை மனதார வேண்டியபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்குச் சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். இதைத் தொடர்ந்து கன்னிப்பெண்கள், குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்களை பால் கலந்த நீரை குழிக்குள் ஊற்றச்செய்ய வேண்டும். பிறகு ஒன்பது நவதானியங்களையும் தூய்மையான வெள்ளைத் துணியில் முடிச்சிட்டு பாலக்கோலில் கட்டி, குழிக்குள் இறக்க வேண்டும். இதுவே பூமி பூஜை செய்யும் முறை. இந்தப் பூமி பூஜையை வாஸ்து நேரத்தில் கடைசி 36 நிமிடத்துக்குள் செய்து முடித்துவிட வேண்டும்.

வாஸ்து புருஷன் கண்விழித்திருக்கும் நேரம் வருமாறு:-
சித்திரை மாதம் 10ந் தேதி காலை 8.54 மணி முதல் 9.30 மணிவரை மணி வரை
வைகாசி மாதம் 21ந் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை

ஆடி மாதம் 11&ந் தேதி காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை
ஆவணி மாதம் 6ந் தேதி பகல் 3.18 மணி முதல் 3.54 மணி வரை
ஐப்பசி மாதம் 11&ந் தேதி காலை 7.42 மணி முதல் 8.18 மணி வரை
கார்திகை மாதம் 8&ந் தேதி 10.54 மணி முதல் 11.30 மணி வரை
தை மாதம் 12ந் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை
மாசி மாதம் 22ந் தேதி காலை 10.06 மணி முதல் 10.42 மணி வரை