கீதாஉபதேசம்செய்த நாள்

ஆன்மிக தகவல்கள்

Day of Githa preaching

11.1.2022
இந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடந்தது. இதில் இறுதியில் கண்ணனின் நுண்ணிய அறிவின் துணையோடு பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இந்த போரின் அடிப்படை ஒரு பங்காளி சண்டைதான். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போர். சூதாட்டத்தில் தோல்வியுற்று நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அதன்பின் பந்தய விதிமுறைக்கு உட்பட்டு நாட்டை திருப்ப கேட்டபோது துரியோதனன் கொடுக்க மறுத்தான். கண்ணன் தூது சென்றும் அவன் பணியவில்லை. அதன்பின்னரே போருக்கு ஆயத்தமானார்கள் பாண்டவர்கள்.
போரில் பாண்டவர்களுக்கு எதிர் வரிசையில் கவுரவர் படை நிற்கிறது. அங்கு தங்களது தாத்தாவும் பிதாமகனுமான பீஷ்மர், ஆசான் துரோணாச்சாரியார் மற்றும் உறவினர்கள் நிற்கின்றனர். ஒரு நாட்டுக்காக இவ்வளவு பேரை எதிர் கொண்டு கொல்ல வேண்டுமா? என்று அர்ஜுனனுக்கு கேள்வி எழுகிறது. வில்லை கீழே போடுகிறான். போர் செய்ய மறுக்கிறான். அப்போது அவனுக்கு தேரோட்டியாக வந்த கண்ணன் இது உறவினர்கள் யுத்தம் அல்ல. தர்மயுத்தம் என்று விளக்குகிறார். அப்போது அவனுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கிறார் கண்ணன். அதுதான் பகவத்கீதை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு இப்படி கீதாஉபதேசம் செய்த நாள் மார்கழி ஏகாதசி.
போர் நடந்த குருஷேத்திரம் இன்றும் குஜராத் மாநிலத்தில் உள்ளது. குருஷேத்திரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் ஜோதீசுவரர் என்ற இடம் உள்ளது. இங்குதான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதாஉபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. இங்கு கிருஷ்ணர் மற்றும் பாண்டவர்களுக்கு தனிதனி சிறிய கோவில்கள் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள வண்ண திருவுருவங்களை பட்டாடை மற்றும் நகைககள் அணிந்து அலங்கரித்து வைத்து உள்ளனர். மகாபாரத போர் நடந்து சுமார் 5,500 ஆண்டுகள் முடிந்து விட்டதாக கணக்கிடப்பட்டு உள்ளது. கீதா உதேசம் செய்த இடத்தில் அன்று இருந்த ஒர் ஆலமரம் இப்போதும் அங்கு உள்ளது.