வைகாசி விசாகத்துக்கு இத்தனை சிறப்புகளா? வழிபாடு நடத்துவது எப்படி?

இன்றைய & நாளைய சிறப்புகள்

Are there so many specialties for Vaikasi Visakha? How to conduct worship?

வைகாசி விசாகம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. முருகப்பெருமான் அவதரித்த நாள் இந்த வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியுடன் கூடி வரும் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் வைகாசி மாதம் பவுர்ணமியுடன் விசாக நட்சத்திரம் இணைந்து வரும். இந்த ஆண்டு (2021) வைகாசி விசாகம் 25.5.2021 அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்று பவுர்ணமி இரவு 7.55 மணி உள்ளது. விசாகம் நட்சத்திரம் மறுநாள் காலை 4.12 மணி வரை உள்ளது. எனவே இந்த வைகாசி விசாக பூஜையை அன்றைய தினம் இரவு 7.55 மணிக்குள் நடத்துவது சிறப்பு.

வைகாசி விசாகத்திற்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன.
முருகப்பெருமானுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு.
விசாகத்தில் வி என்றால் பட்சி என்று பொருள். இங்கே அந்த பட்சியை மயில் என்று எடுத்துக் கொள்ளலாம். சாகன் என்றால் பயணம் செய்பவர் என்று பொருள். அதாவது மயில் பட்சி மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.

*வைகாசி விசாகம் எமதர்ம ராஜனின் பிறந்த தினமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

*மகாபாரத கதாபாத்திரமான அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்து விளங்குவான். அவனுக்கு பாசுபத ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும்.
திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்த நாள் என்று கூறப்படுகிறது.
பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த நாளும் இதுதான்..

*வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் ராமருக்கும், லட்சுமணனுக்கும் குமரனின்(முருகன்) பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். இந்த நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார். இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். அவர்களின் துயரைப் போக்க சிவபெருமான் தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.
சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.
இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

வழிபாடு

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை வணங்குவது சிறந்தது. இந்த ஆண்டு முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை வருவதால் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும். செவ்வாய் தோஷம் மறையும்.

முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.

வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள்.