ஆடி அமாவாசையின் சிறப்பு

ஆன்மிக தகவல்கள்

AAdi ammavasai

6.8.2021

ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பான நாள். இந்த அமாவாசை நாளில்தான் மறைந்த முன்னேர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசையில் செய்யலாம்.
பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு வரத் தொடங்குவார்கள். புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு வந்து சேர்வார்கள். பின்பு தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்பது ஐதிகம். எனவே, இந்த மூன்று அமாவாசைகளையும் பித்ரு வழிபாட்டுக்கு நிச்சயம் அனுசரிக்க வேண்டும்.

பொதுவாக மறைந்த ஒருவரின் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று தர்ப்பணம் செய்யலர். இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறுநாள்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாள்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாள்களாகும். இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.