வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

ஆன்மிக தகவல்கள்

How is Vaikunda Ekadasi fasting?

11.1.2022
வைகுண்ட ஏகாதசி வைணவர்களின் புனிதமான நாள். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் இருக்கும் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் பரமபதவாசல் திறக்கப்படும். பெரும்பாலான கோவில்களில் அதிகாலை வேளையில்தான் பரமபத வாசல் திறக்கப்படும். அந்த நேரத்தில் அந்த திருவாசல் வழியாக சென்றால் பரமபத புண்ணியம் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நல்ல புண்ணியம் கிடைக்கும். மேலும் நீண்ட வாழவும் வழிவகுக்கும். பொதுவாக மாதம் இருமுறை வரும் ஏகாதசி அன்று தொடர்ந்து விரதம் இருந்துவந்தால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. அது முடியாதவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்துமுழு பலனை பெறலாம்.

விரதம் இருப்பது எப்படி?

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்போர் அதற்கு முன்தின நாளே விரதத்திற்கான ஆயத்த பணியை தொடங்க வேண்டும். ஏகாதசிக்கு முதல் நாள் இரவு அளவான உணவு உண்ணவேண்டும். அதன்பின் எதுவும் சாப்பிட வேண்டாம். மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை ஆரம்பிக்கலாம்.
இந்த விரத்தை தங்கள் வசதிக்கு ஏற்ப கடைபிடிக்கலாம். ஆனால் யாராக இருந்தாலும் தானியங்களால் ஆன உணவை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக அரிசி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, கேழ்வரகு போன்ற உணவு பொருளையும் அவைகளில் இருந்து தயாரிக்கப்படும் பலகாரத்தையும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி நவதானியங்களால் செய்யப்படும் உணவு வகைகள், பருப்பு வகைகள், பயறு வகைகளையும் உண்ணக் கூடாது. கடுகு-உளுத்தம்பருப்பு தாளிதத்தைகூட பயன் படுத்தக் கூடாது. காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்றவற்றையும் விலக்க வேண்டும். நெய், தேங்காய் எண்ணை, கடலை எண்ணை ஆகியவற்றை தவிர மற்ற எல்லா எண்ணை வகைகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவற்றை உண்டால் விரதத்தின் பலன்கிடைக்காது.
ஏகாதசி அன்று தங்கள் வசதிக்கு தகுந்தபடி மூன்றுவிதமான விரதத்தை கடைபிடிக்கலாம். முதல்தரமான விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் 2-ம் தரமான விரதத்தை மேற்கொள்ளலாம். அவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் 3-ம் தரமான விரதத்தை கடைபிடிக்கலாம். அவர்கள் சமைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மேற்சொன்ன பொருட்களை கண்டிப்பா தவிர்க்க வேண்டும்.
விரதத்தை முடிக்கும் நேரம்
விரதத்தை எப்படி தொடங்குகிறோமோ அதே போல் முடிப்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறித்த நேரத்தில் விரதத்தை கண்டிப்பாக முடித்து விடவேண்டும். காலம் தாழ்த்தி விரதத்தை முடிக்க கூடாது. நீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பவர்கள் விரதத்தை முடிக்கும் போது துளசி தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்ட தானிய உணவை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.
விரதம் முடிக்க வேண்டிய நேரத்தை அருகில் உள்ள பெருமாள் கோவிலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் அன்றைய தினம் அந்த கோவிலில் எப்போது சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று தெரிந்து கோவிலுக்கு சென்று வரவும்.