மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி?

இன்றைய & நாளைய சிறப்புகள்

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி?

11.1.2022
தைத்திங்கள் 2-ம் நாள் (15-1-2022) சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்ப லக்கினத்தில் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வம் இலை, வெற்றி வேர், சிவப்பு பூசணிப்பூ, சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம் இவைகளை ஜலத்தில் போட்டு அதனுடன் (பன்னீர்) கலந்து மாடுகளுக்கு ஸ்தானம் செய்வித்து மாடு கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு செம்மண் வைத்து மாட்டை அலங்கரித்து காலை 8-9-க்குள் பொங்கல் வைத்து பகல் 12-00 மணிக்கு மேல் 1-00 மணிக்குள் சந்திரன் ஓரையில் கோ பூஜை செய்து நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்து மாடுகளை நமஸ்கரித்து அட்சதை போடவும். பூசணி செடி இலையில் பொங்கல் பிரசாதம் வைத்து மாடுகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
மாடுகளுக்கு அலங்காரங்கள் அவரவர்கள் சம்பிரதாய முறைப்படி புதிய வஸ்திரம் போட்டு மாட்டு கொம்புகளுக்கு விதவிதமான வர்ணம் அடித்து அலங்கரித்து புஸ்பம், கரும்பு, வேப்பிலை, மாவிலை, பிரண்டை, மஞ்சள் செடி இலை, பல வகை வடை, முறுக்கு ஆக 9 வகைகள் வைத்து மாலையாக கட்டி மாட்டின் கழுத்தில் கட்டவும். பூ மாலை போட்டு மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கடக லக்கினத்தில் புதன் ஓரையில் மங்கள வாத்தியத்துடன் நகர்வலம் வந்து, ஆலயத்தில் பூஜை செய்து. தீபாராதனை செய்து தம் இல்லத்தில் திருஷ்டி கழித்து, சூரை தேங்காய் உடைத்து, சுமங்கலி ஆரத்தி எடுத்து மாட்டின் வலது கால் வைத்து வீட்டிற்கு அழைத்து செல்லவும்.
அந்த நேரத்தில் பசு மாடு கோமியம் விட்டால் அல்லது சாணம் இட்டால் மிகவும் அதிர்ஷ்டம். தோஷசாந்தி தன பாக்கியம் ஏற்படும். அலங்கரித்த மாலைகளை கழுத்தில் இருந்து எடுத்து தெரு வாசல்படி மேல் கட்டவும். அதன்பின் சங்கராந்தி பொங்கல் அன்று பசும் சாணியில் செய்து வைத்த பிள்ளையார் சாணியை எடுத்து தெரு வாசல்படி இருபக்கமும் நாமமாகவோ அல்லது ஸ்வஸ்த்தியாகவோ வாசற்படி இருபக்கமும் இடவும். மீதமுள்ள சாணி, புஷ்பம் ஆகியவற்றை கங்கையில் போடவும். தோஷ நிவர்த்தியாகி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.