கொரோனா இரண்டாவது அலை

ஆன்மிக தகவல்கள்


கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு வீரிய தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். வெப்பமயமான நாடு, எனவே இந்தியாவுக்குள் வராது என்று சிலர் சொன்னக் கூற்று எல்லாம் பொய்யாகிவிட்டது. இந்த வைரஸ் கிருமி காற்று, தும்பல், எச்சில், கண்ணீர் போன்ற நீர் துவலைகள் மூலம்தான் பரவுகிறது. அதாவது ஒருவருக்கு பிடித்த ஜலதோஷம் அடுத்தவருக்கு பரவுவதுபோல… சற்று அதிக கோரத்துடன் பரவுகிறது. கோடை காலத்தில் நமக்கு சளி பிடிக்காமலா இருக்கிறது. அதேபோல்தான் இந்த கொரோனா வைரசும் இந்த வெப்ப மண்டலத்திலும் பரவியுள்ளது.
நமது நாட்டின் பாரம்பரியபடி கைகூப்பி வணங்கச் சொன்னார்கள். கை கழுவச் சொல்கிறார்கள். மேலும் இந்து மதத்தில் கடைபிடிக்கப்படுவதுபோல் நெற்றியில் திருநீறு பூசுவது, நாமம் இடுவது போன்றவை, பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் குடிப்பது போன்றவை எல்லாம் நம்உடலுக்கு நல்லதுதான். அதேபோல் பல கிராமங்களில் வேப்பிலையையும், துளசியையும் கட்டித் தொங்கவிட்டு உள்ளனர். இவை எல்லாமே கிருமிகளை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டதுதான்.
அதற்காக இவைகள் எல்லாவற்றையும் நாம் செய்துவிட்டோம் என அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அரசு சொல்லும் அறிவுரைகளை கடைபிடிப்பது நல்லது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க தனித்திருக்கச் சொல்கிறார்கள். இதுவும் இந்து வழிபாட்டில் ஒரு பகுதிதான். முனிவர்களும், ஞானிகளும் தனித்திருந்துதான் தியானம் செய்வார்கள். வள்ளலார் கூட தனித்திரு என்றுதான் கூறுகிறார். தனித்திருக்கும் போது தியானம் செய்தால் உடலுக்கும் மனதிற்கும் நல்லது. எந்த தியானத்தையும், எந்த விரதத்தையும் நம்மால் முடிந்த அளவுக்குத்தான் செய்ய வேண்டும். தகுதிக்கு மீறிய விரதம் தியானம் எல்லாம் தேவை இல்லை.
இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் தொற்று ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு கோணத்தில் வந்து மக்களின் உயிரை குடித்தது. இது இயற்கை சீற்றத்தில் ஒன்றுதான். இதை தடுக்க அரசின் மூலம் மருத்துவர்கள் தியாக மனப்பான்மையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இந்து மதத்தில் இறைவன் மனித ரூபத்தில் வந்து அருள்வார் என்று சொல்வார்கள். அந்த வகையில் இப்போது மருத்துவர்கள் வடிவிலும், விஞ்ஞானிகள் வடிவிலும் கடவுள் வந்துள்ளார். அவர்களை போற்றி வணங்குவோம். ஆ-பாலன்