அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி

ஆன்மிக கதைகள்


மதுரை அருகே அழகர் கோவிலில் கள்ளழகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் வணங்குகிறார்களோ அந்த அளவுக்கு அங்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த கோவிலின் பிரதான கோபுர வாசல் எப்போதும் அடைத்தே இருக்கும். சாத்தப்பட்டிருக்கும் அந்த கதவைத்தான் கருப்பணசாமியாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்த கதவை திறந்து பார்த்தால் அதனுள் பதினெட்டு படிகள் இருக்கும். அதனால்தான் பதினெட்டாம்படி கருப்பணசாமி என்று அழைக்கிறார்கள்.
இந்த தெய்வம் வடக்கில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இதற்கு வடக்கு நோக்கி நின்றே பூஜைகள் செய்வார்கள். இவருக்கு கிருஷ்ண புத்ரன் என்றும் ஒரு பெயர் உண்டு.
பதினெட்டாம்படி கருப்பண சாமிக்கு உருவம் இல்லை. கதவுகளுக்கு சந்தனம், குங்குமம், கற்பூரம், முதலியவை பூசி, மாலை, புஷ்பம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள்.
இங்கு பதினெட்டாம்படி கதவு பிரம்மோற்சவ காலத்தில் சக்கரத் தாழ்வார் வருவதற்காக மட்டும் வருடம் ஒரு முறை திறக்கப்படும்.
தினந்தோறும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்கு கொண்டு வரப்படும் அபிஷேக தீர்த்தம் முதலில் பதினெட்டாம்படியானிடம் வைக்கப் பட்டு, தீர்த்தம் மிகவும் பரிசுத்தமாக நூபுரகங்கையில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று பிரமாணம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகுதான் அது அழகரது அபிஷேகத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த பதினெட்டாம்படியானை பற்றி ஒரு கதை உண்டு. இங்குள்ள பெருமாளுக்கு அழகர் மட்டுமின்றி சுந்தரராஜபெருமாள் என்ற பெயரும் உண்டு. இவர் மிக அழகாக இருப்பார். மலையாள நாட்டை சேர்ந்த ஒரு அரசன் சுந்தரராஜரை அபகரித்து செல்வதற்காக தன்னிடம் இருந்த மந்திரத்திலும், தந்திரத்திலும் கை தேர்ந்த 18 பேரை அனுப்பினான். அவர்களுக்கு துணையாக ஒரு தெய்வத்தையும் அனுப்பினான்.
ஆனால் அழகர் கோவிலில் இருந்த மந்திர தந்திர சாஸ்திர நிபுணர் களாகிய பட்டர்கள் அவர்களின் சூழ்ச்சியை கண்டுபிடித்து பிரதான கோபுர வாசலின் 18 படிகளின் கீழ்வைத்து அவர்களை புதைத்து விட்டார்கள். அவர்களுக்கு உதவியாக வந்த ஒரு தெய்வம் அழகர் மீது கொண்ட பற்றின்காரணமாக அங்கிருந்து செல்ல மனமில்லை. அந்த தெய்வம் இனிமேல் தானும் அந்த கோபுரவாசலில் இருந்து காவல் காத்து கோவில் சொத்துக்களை எல்லாம் பத்திரமாக கவனித்துக் கொள்வதாக பட்டர்களிடம் கூறியது. மேலும் தனக்கு தினமும் அழகரின் அர்த்தசாம நிர்மால்ய நிவேத்தியங்களை தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அப்படி அமையப்பெற்ற தெய்வம்தான் கருப்பணசாமி. இன்றும் அந்த தெய்வத்திற்கு அர்த்தசாம நிவேத்தியம் கொடுக்கப்படுகிறது.
இந்த கருப்பணசாமி கேட்டதை கொடுக்கும் தெய்வமாக விளங்குகிறார். அவருக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகிறார்கள். இவரை நினைத்துத்தான் பல பக்தர்கள் அழகர் கோவில் எல்லைக்கு வெளியே கிடாவெட்டி சாமிகும்பிடுகிறார்கள். கருப்பணசாமிக்கு சந்தனசாத்துப்படி விசேஷமாக நடைபெறும். இவருக்கு பக்தர்கள் அரிவாளையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். -ஆ.பாலன்